செஸ் ஒலிம்பியாட்: மடகாஸ்கர், ஹங்கேரி வீரர்கள் சென்னை வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க மடகாஸ்கர், ஹங்கேரி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.;
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள்.
இந்த செஸ் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் நேற்று முதல் சென்னைக்கு வருகை தர தொடங்கி இருக்கிறார்கள். முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் நேற்று சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரியனியனா, ஹெரிடியனோ, டொவினா, சார்லி மகானிகஜா ராஜெரிசன், ராகோடாமகரோ, ராமலன்சனோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த 2 வீரர்கள் வந்தனர். இவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று தன்னார்வலர்களின் உதவியுடன் ஓட்டலுக்கு பாதுபாப்பாக அழைத்து சென்று தங்குவதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
இன்று உஸ்பெகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வருகிறார்கள்.
இன்று பயிற்சி போட்டி
செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதற்கு முன்னதாக போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டு, அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் துல்லியமாக செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாகும். இதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று செஸ் பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கிடையே, செஸ் ஒலிம்பியாட்டில் நடுவராக பணியாற்ற இருக்கும் இந்தியாவை சேர்ந்த நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் 90 பேர் போட்டி நடைபெறும் அரங்கில் வைக்கப்பட்டு இருக்கும் 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் எப்படி செயல்படுகிறது என்பதை நேற்று பரிசோதித்து பார்த்தனர்.
அத்துடன் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை எந்த மாதிரி நடத்துவது?, புள்ளி விவரங்களை இணையதளத்தில் எப்படி பதிவிடுவது என்பது குறித்து மூத்த நடுவர்கள் குழுவினர், சக நடுவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.