உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடக்கம்; லக்‌ஷயா சென் சாதிப்பாரா?

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் சாதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

Update: 2022-08-21 18:56 GMT

சிந்து விலகல்

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

ஆனால் அண்மையில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக பேட்மிண்டனில் இதுவரை ஒரு தங்கம் உள்பட 5 பதக்கங்களை அறுவடை செய்திருக்கும் சிந்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த போட்டியை தவற விடுவது இதுவே முதல் முறையாகும். 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா இந்த போட்டியில் குறைந்தது ஏதாவது ஒரு பதக்கம் வென்று வந்திருக்கிறது. சிந்து இல்லாததால் அந்த பெருமையை தக்கவைக்க இந்த தடவை மற்ற வீரர்கள் கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

லக்‌ஷயா சென்- பிரனாய்

இப்போதைக்கு காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையரில் தங்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. அவர் 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார். 21 வயதான லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ்- கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொள்கிறார். இதே போல் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எச்.எஸ்.பிரனாய், கடந்த ஆண்டு இந்த போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரான ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகிய இந்தியர்களும் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர். பிரனாய் முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், ஸ்ரீகாந்த், நிகாத் நிகயேனையும்(அயர்லாந்து), சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) சந்திக்கிறார்கள். ஒலிம்பிக் சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), முன்னாள் உலக சாம்பியன் கென்டோ மோமோட்டா (ஜப்பான்), 3-ம் நிலை வீரர் ஆன்டர்ஸ் ஆன்டோன்சென் (டென்மார்க்), நடப்பு சாம்பியன் லோ கியான் யேவ் (சிங்கப்பூர்), ஆசிய சாம்பியன் லீ ஸி ஜியா (மலேசியா) என்று முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருசேர வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சாய்னா நேவால்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் அடிக்கடி காயம் மற்றும் போதிய பார்ம் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார். முதல் சுற்றில் சீனாவின் செங் நிகன் யியுடன் மோதுகிறார். அவர் தொடக்க கட்ட ரவுண்டுகளை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும்.

காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் இரட்டையரில் அசத்திய சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, பெண்கள் இரட்டையரில் அஸ்வினி- சிக்கி ரெட்டி, காயத்ரி கோபிசந்த்- திரீஷா ஜாலி ஆகிய இந்திய ஜோடிகளுக்கு பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்