ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணிக்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் நேரடி தேர்வு
இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.;
புதுடெல்லி,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா (65 கிலோ), உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.