ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை

இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

Update: 2022-04-23 22:15 GMT
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் அரியானாவை சேர்ந்த 24 வயதான ரவிகுமார் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். அவர் ஏற்கனவே 2020, 2021-ம் ஆண்டுகளிலும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி இருந்தார்.

மற்ற இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா (65 கிலோ), கவுரவ் பாலியன் (79 கிலோ) தங்களது இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. நவீன் (70 கிலோ), சத்யவார்த் காடியன் (97 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி உள்பட 15 பதக்கங்கள் வென்றுள்ளது.

மேலும் செய்திகள்