பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-11-16 09:50 GMT

செங்கல்பட்டு,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 15.11.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற 21-வது உலக சிறு விலங்குகள் கால்நடை மருத்துவ சங்கத்தின் தொடர் கல்வித் திட்டம் (WSAVA -CE) மற்றும் இந்தியாவின் சிறு விலங்கு பயிற்சியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FSAPAI) கருத்தரங்க நிகழ்ச்சியில், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது;-

"பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய திறமையின் மூலம், விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டில் B.V.Sc (Bachelor of Veterinary Science) சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து ஏராளமான பதக்கங்களை குவித்து வருகிறார்.

சமீபத்தில், நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக துளசிமதிக்கு உயர் ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் துளசிமதியை அனைவரும் பாராட்டுவதை பார்க்கும்போது, விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல், அவருடைய உடன்பிறவா அண்ணனாகவும்,, நான் பெருமையும் மகிழ்ச்சியும், அடைகிறேன். அவரை இத்தருணத்தில் வாழ்த்துகின்றேன்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக தமிழ்நாடு சிறு விலங்குகள் பயிற்சியாளர்கள் சங்கத்தின் முயற்சிகளை நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் கீழ், கால்நடைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் கால்நடைகளுக்கான மாநில சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட சில குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு முக்கிய நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்புத் துறையின் ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5 லட்சம் தெரு விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி 1 கோடி ரூபாய் செலவில் 50% மானியத்துடன் போடப்படும். இம்முயற்சி நமது விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெறிநாய்க்கடி பரவுவதைத் தடுப்பதன் மூலம் பொது சுகாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மேலும், 400 கால்நடை மருத்துவர்களுக்கு ரூ.1 கோடி செலவில் விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்கான அறிவிப்பையும் முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. கால்நடை மையங்களில் நவீன நோயறிதல் கருவிகளைக் கையாளும் நிபுணத்துவத்தை மருத்துவர்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடை மருத்துவ நிபுணர்களை புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்கின்றோம்.

இந்த முற்போக்கான நடவடிக்கைகள், விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலை உருவாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த கருந்தரங்க நிகழ்ச்சியானது, விலங்குகளின் வாழ்க்கையை வளப்படுத்த அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்ட துளசிமதி விளையாட்டுத்துறை, கால்நடை மருத்துவத்துறை என இரண்டிலும் இன்னும் பல உயரங்களைத் தொட நம்முடைய திராவிட மாடல் அரசும், முதல்-அமைச்சரும் என்றும் அவருக்கு துணை நிற்பார்கள். அவரது சாதனைகள் தொடரட்டும்."

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்