உலகக் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியா-அர்ஜென்டினா ஆட்டம் 'டிரா'
இன்றைய லீக் ஆட்டங்களில் தென்கொரியா- ஜப்பான் (மாலை 5 மணி), ஜெர்மனி-பெல்ஜியம் (இரவு 7 மணி) அணிகள் சந்திக்கின்றன.
புவனேஸ்வர்,
16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியான ஆஸ்திரேலியா, முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் (ஏ பிரிவு) மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 58-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிளாக் கோவர்ஸ் கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
முடிவில் திரில்லிங்கான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 'சி' பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை சாய்த்து 2-வது வெற்றியோடு, அடுத்த சுற்றை உறுதி செய்தது. இதே பிரிவில் மலேசிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் சிலியை தோற்கடித்தது.
இன்றைய லீக் ஆட்டங்களில் தென்கொரியா- ஜப்பான் (மாலை 5 மணி), ஜெர்மனி-பெல்ஜியம் (இரவு 7 மணி) அணிகள் சந்திக்கின்றன. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 'டி' பிரிவில் நடந்த இந்தியா- இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.