பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி: இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்

பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதுகின்றன.

Update: 2023-06-10 00:40 GMT

கமாமிகஹரா,

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் சீனா, முன்னாள் சாம்பியன் தென்கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் சீனா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான், மலேசியா, சீனதைபே ஆகிய அணிகளை தோற்கடித்தது. தென்கொரியாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் தனது பிரிவில் (ஏ) முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இதேபோல் ஜப்பான் அணி லீக் சுற்றில் ஹாங்காங், இந்தோனேஷியா, கஜகஸ்தான் அணிகளை எளிதில் தோற்கடித்தது. 0-1 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது. தனது பிரிவில் (பி) 2-வது இடம் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் பிரீத்தி கருத்து தெரிவிக்கையில், 'இந்த போட்டி தொடரில் இதுவரை எங்களது ஆட்டம் குறிப்பிடத்தக்கவகையில் இருந்து இருக்கிறது. இந்த உத்வேகத்தை அரைஇறுதியிலும் தொடருவதே எங்கள் நோக்கமாகும். அத்துடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதும் எங்கள் எண்ணமாகும். அந்த இலக்கை எட்ட இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். எனவே ஜப்பானுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் எங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துவோம்' என்றார்.

இந்த போட்டி தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சிலியில் வருகிற நவம்பர் 29-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்