'பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறுவோம்' - பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா நம்பிக்கை

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்று போட்டிகள் மூலம் நிச்சயம் தகுதி பெறுவோம் என பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-10 23:02 GMT

புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா பூனியா நேற்று டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

"சமீபத்தில் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்காக நாங்கள் சிறந்த முறையில் தயாராகி இருந்தோம். இதில் நாங்கள் தங்கப்பதக்கம் வென்று இருந்திருக்கலாம். ஆனால் அரைஇறுதியில் சீனாவிடம் தோல்வி அடைந்து விட்டோம். உடனடியாக எங்களது வீராங்கனைகளிடம், 'தோல்வியை மறந்து விட்டு வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள். நாட்டுக்கு பதக்கமின்றி வெறுங்கையுடன் செல்லக்கூடாது' என்று கூறினேன். அதன்படியே 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானை தோற்கடித்தது வெண்கலப்பதக்கம் வென்றோம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எங்களது இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) நிறைவேறவில்லை. அந்த எண்ணம் ஒவ்வொரு வீராங்கனைகளின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு ஆசிய விளையாட்டு போட்டி மூலம் நேரடியாக தகுதி பெறவில்லை என்றாலும் தகுதி சுற்று போட்டிகள் மூலம் நிச்சயம் தகுதி பெறுவோம். எங்களது பதக்க இலக்கை அடைவோம்.

இப்போது நமது அணி நல்ல நிலையில் உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுக்கு 3 மாதங்கள் (சீனா அல்லது ஸ்பெயினில் நடக்கிறது) உள்ளது. இந்த போட்டிக்கு இன்னும் கடினமாக உழைப்போம். நமது ஆக்கிக்கே உரிய பாணியில் விளையாடினால் எந்த அணிக்கும் எங்களால் கடும் சவால் கொடுக்க முடியும்."

இவ்வாறு சவிதா கூறினார். ஆசிய விளையாட்டில் ஆண்கள் ஆக்கியில் இந்தியா தங்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்