நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Update: 2024-09-01 04:59 GMT

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்திய இந்திய ஆக்கி அணி அடுத்ததாக ஆசிய கண்டத்தின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

செப்டம்பர் 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய ஆக்கி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கருத்து தெரிவிக்கையில், 'எங்களது தரவரிசை புள்ளியை வலுப்படுத்துவதற்கு இது எங்களுக்கு முக்கியமான போட்டி தொடராகும். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அனைத்து கொண்டாட்டங்களுக்கு பிறகு பயிற்சி முகாமுக்கு திரும்பி இருக்கிறோம். கடந்த சில வாரங்களாக அணியினருக்கு கிடைத்த அன்பும், பாராட்டும் நம்ப முடியாத வகையில் இருந்தது. இந்த ஆதரவு வரும் போட்டிகளிலும் தொடரும் என்று நம்புகிறோம். 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்கான காலகட்டம் எங்களுக்கு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் தொடங்குகிறது.

நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம். பாரீஸ் ஒலிம்பிக்கில் விளையாடிய அணியில் இடம் பெற்று இருந்த சில வீரர்களுக்கு ஓய்வு அளித்து, சில இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து இருக்கிறோம். பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இளம் வீரர்கள் பிரகாசிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்