பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.;
ராஞ்சி,
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இதில் பெண்கள் ஆக்கியில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா, அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகள் 2 தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.
இதன் ஒரு தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக்குடியரசு அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி-சிலி (பகல் 12 மணி), ஜப்பான்-செக்குடியரசு (பிற்பகல் 2.30 மணி), நியூசிலாந்து-இத்தாலி (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
சவிதா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் வியூகத்துடன் களம் காணுகிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடுவது இந்திய அணிக்கு அனுகூலமாகும். அதேநேரத்தில் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை குறைத்து மதிப்பிட முடியாது. வலுவான இரு அணிகளும் போட்டியை வெற்றியுடன் தொடங்க மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.