ஸ்பெயின் ஆக்கித் தொடர்; இந்தியா- நெதர்லாந்து ஆட்டம் டிரா

இந்திய ஆக்கி அணி ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

Update: 2023-07-27 07:16 GMT

image courtesy;twitter/@TheHockeyIndia

பார்சிலோனா,

ஸ்பெயின் ஆக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஆக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்று உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணி உடன் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி உடன் மோதியது.

போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்திலேயே இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதன் பிறகு இரு அணியாலும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்க முடியவில்லை. இரு அணி வீரர்களும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டினர். இதனால் போட்டி விறுவிறுப்பாக சென்றது. முதல் பாதி நேரத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது பாதி நேரம் தொடங்கிய 40-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் ஜாஸ்பர் பிரிங்க்மேன் கோல் அடித்து போட்டியை சமனிலைக்கு கொண்டு வந்தார். இதன் பின் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. முழு நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சமனிலையில் இருந்ததால் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி அடுத்த போட்டியில் நாளை இங்கிலாந்து அணி உடன் மோத உள்ளது.

இந்தத் தொடரில் நடந்த மகளிருக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணி உடன்  1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்