புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி
இந்திய அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.;
ரூர்கேலா,
9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி முதல் கோல் போட்டது.
பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஹெல்விக் மால்ட் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது.
ரூர்கேலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.