'5 பேர் ஆக்கி உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு'- நவ்ஜோத் கவுர்

ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

Update: 2023-09-05 08:04 GMT

image courtesy; twitter/@imnavjotkaur01

புது டெல்லி,

முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற உள்ளது. அதில் பங்குபெறுவதற்காக நடத்தப்பட்ட ஆசிய பெண்கள் அணி தகுதி சுற்றில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை மற்றும் அணிகள் இடம்பெற்றுள்ள குழுக்களை சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் இந்திய அணி 'சி பிரிவில்' அமெரிக்கா, போலந்து மற்றும் நமிபியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. ஓமன், மலேசியா, பிஜி மற்றும் நெதர்லாந்து அணிகள் 'ஏ பிரிவிலும்' , ஆஸ்திரேலியா, உக்ரைன், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜாம்பியா அணிகள் 'பி பிரிவிலும்' நியூசிலாந்து, தாய்லாந்து, பாராகுவே மற்றும் உருகுவே அணிகள் 'டி பிரிவிலும்' இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து, இந்திய அணிக்கு தலைமை தாங்கிய நவ்ஜோத் கவுர் பேசுகையில், ' எதிர்வரும் உலகக்கோப்பை தொடரை ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளோம். பலம் வாய்ந்த அணிகளுடன் குழுவில் இடம்பெற்றுள்ளோம். அதனால் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். தகுதி சுற்று கோப்பையை வென்றோம். அடுத்தது உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு. கோப்பையை கைப்பற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்போம். இதுபோன்ற பெரிய தொடர்களில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்