அடுத்த ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு - இந்திய ஆக்கி வீரர்

எனது ஆட்டத்தையும், உடல் தகுதியையும் சிறப்பாக வைத்திருக்க முடிந்தால், அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் விளையாடுவேன் என மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.

Update: 2024-08-27 03:47 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்றது. பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர் மன்பிரீத் சிங் (வயது 32). இவர் இதுவரை 4 ஒலிம்பிக் தொடர்களில் ஆடி உள்ளார். அடுத்த ஒலிம்பிக் தொடர் வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அடுத்த ஒலிம்பிக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளதாக இந்திய ஆக்கி வீரர் மன்பிரீத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு. ஆனால் இது எனது உடல் தகுதியை பொறுத்த விஷயமாகும். எனது ஆட்டத்தையும், உடல் தகுதியையும் சிறப்பாக வைத்திருக்க முடிந்தால், நிச்சயம் அடுத்த ஒலிம்பிக்கில் விளையாடுவேன்.

ஆக்கியில் தற்போது இருக்கும் சூழலில் உடல் தகுதி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இறுதியில் அனைத்து விஷயங்களும் இதனை பொறுத்து தான் முடிவாகும். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது அருமையான விஷயமாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் தொடர்ச்சியாக பதக்கம் வென்றிருக்கிறோம். இது அனைத்து வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும்.

நான் 4 ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கிறேன். அதில் முதல் 2 முறை பதக்கம் கிடைக்கவில்லை. ஆனால் கடைசியாக நடந்த இரு ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்றதால் எனக்கு இருக்கும் மகிழச்சியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நான் எப்போதும் அணியின் தேவைக்கு தகுந்த நிலையில் விளையாட தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்