சர்வதேச ஜூனியர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்'
ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
ஜோஹார்,
6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மல்லுக்கட்டின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமன்) முடிந்தது.
இந்திய அணி தரப்பில் சுதீப் சிர்மாகோ 14-வது நிமிடத்திலும், ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் ஹாலன்ட் 29-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். போட்டி சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்ததால் மீண்டும் சமநிலை ஏற்பட்டது. இதனை அடுத்து 'சடன் டெத்' முறை கையாளப்பட்டது. இதன் முடிவில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை தனதாக்குவது 3-வது முறையாகும். ஏற்கனவே 2013, 2014-ம் ஆண்டுகளில் இந்தியா இந்த போட்டியில் பட்டம் வென்று இருந்தது. பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா தரப்பில் உத்தம்சிங் 2 கோலும், விஷ்ணுகாந்த் சிங், அங்கித் பால், சுதீப் சிர்மாகோ தலா ஒரு கோலும் அடித்தனர்.
இவ்விரு அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்து இருந்தது நினைவுகூரத்தக்கது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது. 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி 3-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் மலேசியாவை விரட்டியடித்தது.