இந்தியாவில் மீண்டும் ஹாக்கி உலக கோப்பை - அதிருப்தி தெரிவித்த பெல்ஜியம் வீரர்...!
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது.
2010ல் டெல்லியிலும், 2018ல் ஒடிசாவின் புவனேஸ்வரிலும் போட்டியை நடத்தியது. இந்தியாவுக்கு இவ்வாறு தொடர்ந்து உலக கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது குறித்து பெல்ஜியம் ஹாக்கி வீரர் எலியட் வான் ஸ்ட்ரைடாங்க் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:-
கடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் மூன்று தொடர்களை ஒரே நாட்டில் விளையாட விளையாட்டு அமைப்பு ஒப்புக்கொள்வது எப்படி சாத்தியம்? இந்தியா இந்த முறையும் போட்டியை நடத்துவது வருத்தமளிக்கிறது. ஆனால், தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான்.
பருவநிலை போட்டியை நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஹீரோ அல்லது ஒடிசா போன்ற உலகளாவிய ஸ்பான்சர்கள் உள்ளனர். போட்டியை நடத்தும் நாடு குறித்த தேர்வானது, நிதி ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் விளையாட்டைப் பொருத்தவரை நியாயமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-0 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.