மகளிர் ஆக்கி; சீனாவுக்கு எதிராக இந்திய அணி போராடி தோல்வி...!!

இந்திய மகளிர் ஆக்கி அணி ஜெர்மனி சுற்றுப்பயணத்தில் சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து உள்ளது.

Update: 2023-07-17 06:17 GMT

image courtesy;twitter/@TheHockeyIndia

லிம்பர்க்,

இந்திய மகளிர் ஆக்கி அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜெர்மனிக்கு சென்று உள்ளது. அங்கு இரண்டு ஆட்டங்களில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி லிம்பர்க் மைதானத்தில் சீனா உடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு கிடைத்த   பெனால்டி வாய்ப்பை வீணடித்தது. சீனாவின் தடுப்பு அரணை மீறி இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

அதே வேளையில் சீனா அணி கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.  இந்திய அணி சிறிது நேரத்திலேயே கோல் அடித்து சமநிலைக்கு கொண்டு வந்தது.

அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய  45-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து சீனா 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது.

 51-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து சீனா 3-2 என்று முன்னிலை பெற்றது. அதுவே வெற்றிக்குரிய கோலாகவும் அமைந்தது. இறுதி நேரத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் சீனாவின் தடுப்பு அரணை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை வீணடித்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தரப்பில் 2 கோல்களையும் நவ்னித் கவுர் அடித்தார்.

இந்திய அணி வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஜெர்மனி அணி உடன் மோத உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்