பெண்கள் உலக கோப்பை ஆக்கி: வெற்றியோடு தொடங்குமா இந்திய அணி? இங்கிலாந்துடன் இன்று மோதல்

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி இன்று தனது முதலாவது லீக்கில் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Update: 2022-07-02 20:53 GMT

ஆம்ஸ்டெல்வீன்,

பெண்கள் உலக கோப்பை ஆக்கி

15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் இன்னொரு முறை மோதிய பிறகு அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும். இதில் 'பி' பிரிவில் இந்தியாவுடன், சீனா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4-ம் நிலை அணியான இங்கிலாந்தை ஆம்ஸ்டெல்வீன் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோற்று மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்ட இந்திய அணி அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் காத்திருக்கிறது.

உலக கோப்பை ஆக்கியில் இந்திய அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. 1974-ம் ஆண்டு போட்டியில் 4-வது இடத்தை பிடித்ததே சிறந்த செயல்படாகும். கடைசியாக நடந்த உலக கோப்பை (2018-ம் ஆண்டு) தொடரில் இந்தியா 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பயிற்சியாளர் நம்பிக்கை

அண்மையில் புரோ ஆக்கி லீக்கில் சிறப்பாக விளையாடி 3-வது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனைகள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் காயத்தால் இடம் பெறாவிட்டாலும் கூட, கேப்டனும், கோல் கீப்பருமான சவிதா பூனியா, துணை கேப்டன் தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், சுஷிலா சானு, நேகா கோயல், சோனிகா, சலிமா டெடி, வந்தனா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், ஷர்மிலா தேவி என்று திறமையான வீராங்கனைகளுக்கு இந்திய அணியில் பஞ்சமில்லை. தவறுக்கு இடம் கொடுக்காமல் விளையாடினால் வெற்றியோடு பயணத்தை தொடங்கலாம்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜனேக் ஸ்காப்மன் கூறுகையில், 'நாங்கள் எங்களது உண்மையான திறமைக்கு ஏற்ப, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் எதையும் சாதிக்கலாம். டாப்-3 இடத்திற்குள் வருவது சாத்தியமே. முழு திறமைக்கு ஏற்ப ஆடினால் எங்களை வீழ்த்துவது கடினம்' என்றார்.

ரசிகர்களுக்கு கேப்டன் அழைப்பு

இந்திய கேப்டன் சவிதா கூறுகையில், 'நெதர்லாந்தில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் நேரில் வந்து போட்டியை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ரோட்டர்டாமில் நடந்த புரோ ஆக்கி லீக்கின் போது இந்தியர்கள் அதிக அளவில் வந்து ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தினர். ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இன்னும் உத்வேகம் அளிக்கும்' என்றார்.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்