ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க தயாராக இருக்கிறோம் - இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. இதையொட்டி இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில், 'நாங்கள் தீவிரமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயண தொடரை முடித்து இப்போது தான் திரும்பி இருக்கிறோம். சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் திரும்புவோம். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் அணியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.
எங்கள் அணியின் ஒற்றுமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற எங்களுடைய குறிக்கோளை எட்டுவதில் நாங்கள் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஒவ்வொரு நாளும் எடுக்கும் பயிற்சி கவனத்தில் கொள்ளப்படும். ஒலிம்பிக் வேட்கையுடன் எங்களது கவனத்தை செலுத்தி வருகிறோம். ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்' என்றார்.
ஒலிம்பிக் ஆக்கியில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூலை 27-ந் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.