ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றி..!!
இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றுள்ளது.
சலாலா,
அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக வெற்றியும் , மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் இன்று மலேசியா உடன் மோதியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் 4 கோல்கள் அடித்தது. ஆனால் மலேசியா இரண்டாவது பாதியில் 2 கோல்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் சிங் குர்ஜோத் 5 கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்திய அணி தனது 5-வது ஆட்டத்தில் இன்றிரவு ஜப்பான் அணியுடன் மோத உள்ளது.