அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி வெற்றி

அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்தியன் ஆயில் அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படையை தோற்கடித்தது.

Update: 2023-08-27 00:36 GMT

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடகா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமைச் செயலகத்தை வீழ்த்தியது. கர்நாடக அணியில் திரிசுல் கணபதி (21-வது நிமிடம்), பிரானம் கவுடா (57-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய தலைமைச் செயலக அணியில் முகமது ஹாரிக் (3-வது நிமிடம்) ஒரு கோல் போட்டார்.

மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தை சாய்த்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பில் குர்சிம்ரன் சிங் 37-வது நிமிடத்திலும், சச்சின் 58-வது நிமிடத்திலும் கோலடித்தனர். ராணுவம் தரப்பில் ரஜந்த் 47-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படையை தோற்கடித்தது. இந்தியன் ஆயில் அணியில் அர்ஷ்தீப் சிங் (7-வது நிமிடம்), ரகுநாத் (14-வது நிமிடம்), அப்பான் யூசுப் (40-வது நிமிடம்), ரோஷன் மின்ஸ் (55-வது நிமிடம்) தலா ஒரு கோலடித்தனர். இந்திய கடற்படை தரப்பில் சுஷில் தன்வார் (13-வது நிமிடம்), செல்வராஜ் (19-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினர்.

இன்றைய லீக் ஆட்டங்களில் தணிக்கை துறை அலுவலகம்-இந்திய விமானப்படை (பிற்பகல் 2.30 மணி), இந்திய கடற்படை-இந்தியன் ரெயில்வே (மாலை 4.15 மணி), தமிழ்நாடு-இந்திய ராணுவம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்