உலகக்கோப்பை கால்பந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; உரிமத்தையே ரத்து செய்த பிபா - அதிர்ச்சி பின்னணி

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமைத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்தது.;

Update:2022-08-16 11:02 IST

புதுடெல்லி,

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இன்று தற்காலிகமாக ரத்து செய்தது. ஃபிஃபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிபாவின் நடவடிக்கையும்... பின்னணியும்...

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பதவி காலம் 4 ஆண்டுகளாகும். ஒரு நபர் 3 முறை தலைவர் பதவியில் இருக்கலாம். அந்த வகையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரபுல் படேல் கடந்த 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இவரது பதவி காலம் கடந்த 2020 டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

ஆனால், தனது தலைமையிலான நிர்வாக குழுவின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டுமென பிரபுல் படேல் 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இதன் காரணமாக வழக்கை காரணம் காட்டி புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 2020-ம் ஆண்டே அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேர்தலை நடத்தாமல், பதவிகாலம் முடிந்தும் பிரபுல் படேல் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான நிர்வாக குழுவும் செயல்பட்டு வந்தது.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்டு, பதவி காலம் முடிந்தும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்த பிரபுல் படேலை பதவியில் இருந்து நீக்கியது. அவரை நிர்வாக குழுவில் இருந்து நீக்கியதுடன் அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.

இதனிடையே 2020-ம் ஆண்டுக்கான 17 வயதிற்கு உட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த சுப்ரீம் கோர்ட்டு புதிதாக தேர்தலை நடத்து ஏதுவாக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. மேலும், மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை கட்டாயம் இந்தியாவில் நடத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த கமிட்டியில் முன்னாள் சுப்ரீம் கோட்டு நீதிபதி ஏ.ஆர். தேவ், தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கர் கங்குலி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த கமிட்டி, இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தலை நடத்தவும், அது தொடர்பான விதிகளை விதிக்கவும் அமைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை இந்த கமிட்டியே இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து சர்வதேச கால்பந்து தொடர்பான விவகாரங்களை கவனிக்க இந்த கமிட்டி 12 பேர் கொண்ட ஆலோசனை குழுவை அமைத்தது. மேலும், தேர்தல், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் புதிய விதிகளை அமைக்க இந்த கமிட்டி 7 பேர் அடங்கிய மாநில கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை பெற்றது.

இந்த ஆலோசனைகளை பெற்று இந்த கமிட்டி புதிய விதிகள் அடங்கிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆனால், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் மாநில பிரிவுகள் சில புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 7 பேர் கொண்ட மாநில பிரிவின் குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவால் விதிக்கப்பட்ட இந்த புதிய விதிகள் பாகுபாட்டை காட்டுவதாகவும், அபத்தமாக உள்ளதாகவும் கூறி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவுக்கு கடிதம் எழுதியது.

புதிய விதிகளில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை 50 சதவிகிதம் பிரபலமான மற்றும் ஓய்வு பெற்ற கால்பந்து வீரர்/வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, 36 கால்பந்து வீரர்-வீராங்கனைகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேவேளை, மாநில கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் 36 பேருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த புதிய விதியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மாநில கால்பந்து கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் பிபாவுக்கு கடிதம் எழுத்தியுள்ளனர்.

அதேபோல், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரபுல் படேலும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பிரபுல் படேல் ஏற்கனவே சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த கடிதங்களை தொடர்ந்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை 50 சதவிகிதம் வீரர்-வீராங்கணைகளுக்கு வழங்கப்பட்டதற்கு பிபா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையில் தனிநபர்களின் சேர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பிபா கடிதம் எழுதியது.

மேலும், மூன்றாம் நபர்கள் தலையீடு இருக்குமாயின், 17 வயதிற்கு உட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் இருந்து இடமாற்றம் செய்வதுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்வோம் என எச்சரித்தது.

36 பிரபல வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்வாளர் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சிய 36 பேர் மாநில கால்பந்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆவர்.

இதனிடையே, இந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட சப்ரதா தத்தா மற்றும் லர்சிங் மிங் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த 2 பேரும் ஏற்கனவே 3 முறை பதவி வகித்துள்ளதால் அவர்கள் எந்த பதவிக்கும் போட்டியிட தகுதி அற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த 2 பேரின் வேட்புமனுக்களையும் தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா நிராகரித்தார்.

இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில், மூன்றாம் நபர் தலையீடு உள்ளதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும் தற்காலிகமாக ரத்து செய்தது. உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி, வரும் 28-ம் தேதி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்