ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் இளம் இந்திய நட்சத்திர வீரர்? வெளியான தகவல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Update: 2024-07-26 05:25 GMT

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் - கவாஸ்கர் தொடர்) ஆட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த முறை 5 ஆட்டங்கள் கொண்ட தொடராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக செப்டம்பர் மாதம் துவங்கும் துலீப் கோப்பையில் விளையாடுமாறு அவரை இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஏனெனில் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த அர்ஷ்தீப் சிங் அந்த தொடரில் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஒரு டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை சமன் செய்தார். அது மட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் தொடர்ந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

எனவே அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று ஜாம்பவான் வாசிம் மாக்ரம் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் விரைவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு:- "இந்தியாவுக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதனால் அவரை செப்டம்பர் 5-ம் துவங்கும் துலீப் கோப்பையில் விளையாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவதற்கு ஜஸ்பிரித் பும்ராவுடன் அவரும் துருப்புச் சீட்டாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்