உலகக்கோப்பை தகுதிச்சுற்று: சீன் வில்லியம்ஸ் அதிரடி...அமெரிக்காவுக்கு எதிராக 408 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே...!

ஜிம்பாப்வே அணி தரப்பில் சீன் வில்லியம்ஸ் 174 ரன்கள் குவித்தார்.

Update: 2023-06-26 10:43 GMT

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இருந்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 6 அணிகள் முன்னேறி உள்ளன.

அதன்படி குரூப் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் முன்னேறி உள்ளன. நேபாளம், அமெரிக்கா, அயர்லாந்து, யுஏஇ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன.

இந்நிலையில் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி, காயா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் கும்பி 78 ரன்னும், காயா 32 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ராசா 48 ரன்னிலும், அடுத்து வந்த பர்ல் 47 ரன்னிலும், லுக் ஜோங்வே 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வில்லியம்ஸ் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்த நிலையில் 174 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.இறுதியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 409 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் அமெரிக்க அணி ஆட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்