சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி; படிதார் அரைசதம்... மத்திய பிரதேசம் 174 ரன்கள் குவிப்பு
மத்திய பிரதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை - மத்தியபிரதேசம் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அர்பித் கவுட் மற்றும் ஹர்ஷ் கவ்லி ஆகியோர் களம் இறங்கினர். இதில் அர்பித் கவுட் 3 ரன், ஹர்ஷ் கவ்லி 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய சுப்ரான்சு சேனாபதி 23 ரன், ஹர்பிரீத் சிங் பாட்டியா 15 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து கேப்டன் ரஜத் படிதார் களம் புகுந்தார். அவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் வெங்கடேஷ் ஐயர் 17 ரன்னிலும், ராகுல் பாதம் 19 ரன்னிலும், சிவம் சுக்லா 1 ரன்னிலும், திரிபுரேஷ் சிங் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ரஜத் படிதார் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மத்திய பிரதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் குவித்தது. மத்திய பிரதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடி வருகிறது.