உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி.!
உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
திருவனந்தபுரம்,
நியூசிலாந்து 2-வது வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது. டிவான் கான்வே (78 ரன்), டாம் லாதம் (52 ரன்) அரைசதம் அடித்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன்களுடன் (51 பந்து, 3 பவுண்டரி) பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் இங்கிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 322 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை.
'டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறைப்படி 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 84 ரன்களுடன் (89 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.
இங்கிலாந்து அபாரம்
கவுகாத்தியில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் 'டாஸ்' ஜெயித்த வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 30-வது ஓவரில் ஆடிய போது மழை பெய்ததால் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து 37 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 74 ரன்கள் எடுத்தார்.
பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து அணி 37 ஓவர்களில் 197 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இலக்கை இங்கிலாந்து அணி மொயீன் அலி (56 ரன், 39 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), பேர்ஸ்டோ (34 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லர் (30 ரன்), ஜோ ரூட் (26 ரன்) ஆகியோரது பங்களிப்புடன் 24.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.