உலகக்கோப்பை: இலங்கையை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.
பெங்களூரு,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.இதில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் இலங்கை அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 25 பந்துகளில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். தனஞ்செய டி சில்வா 19 ரன்னும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மதுஷனகா 19 ரன்கள் எடுத்தார்.கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.இறுதியில், இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக டேவான் கான்வே , ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர்.தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
தொடக்க விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.