உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பாதைக்கு திரும்புமா நியூசிலாந்து...? - பாகிஸ்தானுடன் நாளை மோதல்...!
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதில் இந்திய அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மீதமுள்ள 3 அரையிறுதி இடத்திற்கு மற்ற அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.
முதல் 4 ஆட்டங்களில் கம்பீரமாக வெற்றி நடை போட்ட நியூசிலாந்து கடைசி 3 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக அந்த அணி நாளை நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆட உள்ளது.
அதேவேளையில் 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பாகிஸ்தான் 3 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் ஆட உள்ளது.
இரு அணிகளுக்கும் வெற்றி மிக முக்கியம் என்பதால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.