உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா: இன்னும் 7 நாட்களில்....!!
இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை போட்டிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்: ஆஸ்திரேலியாவின் ‘வீறுநடை’
ஆஸ்திரேலியாவின் 'வீறுநடை'
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. அதற்கு முன்பாக இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை போட்டி பற்றிய ஒரு கண்ணோட்டத்தை தினந்தோறும் பார்க்கலாம்.
8-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து (2003-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதல் மார்ச் 23-ந்தேதி வரை) நடத்தின. ஆப்பிரிக்க கண்டத்தில் அரங்கேறிய முதல் உலகக் கோப்பை இது தான். கடந்த உலகக் கோப்பையில் ஆடிய ஸ்காட்லாந்து தகுதி பெறவில்லை. கனடா, நமிபியா, நெதர்லாந்து புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
முந்தைய உலகக் கோப்பை போட்டிக்குரிய நடைமுறையே இதிலும் பின்பற்றப்பட்டது. அதாவது அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வரும் அணியை லீக்கில் வீழ்த்தி இருந்தால் தலா 4 புள்ளியும், தகுதி பெறாத அணியை தோற்கடித்து இருந்தால் தலா ஒரு புள்ளியும் போனசாக எடுத்து செல்ல முடியும்.
'ஏ' பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி சவுரவ் கங்குலி தலைமையில் களம் இறங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக்கில் 125 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்த பிறகு மீண்டெழுந்த இந்தியா மற்ற 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. இதில் செஞ்சூரியனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சுவைத்த வெற்றி மறக்க முடியாத ஒன்று. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 274 ரன் இலக்கை இந்திய அணி சச்சின் தெண்டுல்கரின் (98 ரன், 75 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதிரடியால் 45.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், வாக்கர் யூனிஸ், அப்துல் ரசாக் போன்ற அபாயகரமான பந்து வீச்சாளர்களை தெண்டுல்கர் விளாசிய விதம் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியது. நடப்பு சாம்பியனான ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா 6 லீக்கிலும்் வெற்றிகளை வாரி சுருட்டியது. ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் இந்த பிரிவில் 3-வது அணியாக ஜிம்பாப்வே சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டி ஆச்சரியப்படுத்தியது. அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேக்கு சென்று விளையாட மறுத்ததும், பாகிஸ்தானுக்கு எதிரானஆட்டம் மழையால் பாதியில் ரத்தானதும் ஜிம்பாப்வேக்கு அதிர்ஷ்ட கதவை திறந்து விட்டது.
'பி' பிரிவில் ஸ்டீவ் டிக்கோலா தலைமையிலான கென்யாவின் எழுச்சி புருவத்தை உயர வைத்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நியூசிலாந்து, கென்யாவுக்கு சென்று விளையாட மறுத்ததால் அதற்குரிய 4 புள்ளி கென்யாவுக்கு கிட்டியது. மேலும் இலங்கை, வங்காளதேசம், கனடா அணிகளையும் தோற்கடித்து கென்யா 16 புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் வாய்ப்பை பெற்றது. இந்த பிரிவில் இலங்கை (18 புள்ளி), நியூசிலாந்து (16 புள்ளி) அணிகளும் அடுத்த சுற்றை எட்டின.
இங்கிலாந்துக்கு எதிரான லீக்கில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஒரு பந்தை மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். இது அவருக்கு உலகின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதே போல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கனடா வெறும் 36 ரன்னில் அடங்கியது. உலகக் கோப்பையில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோர் இது தான்.
சூப்பர் சிக்ஸ் சுற்றில், எதிர் பிரிவில் இருந்து வந்த 3 அணிகளையும் இந்தியா, ஆஸ்திரேலியா வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியோடு அரைஇறுதியை உறுதி செய்தன. கென்யா, ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது. எஞ்சிய இரு ஆட்டங்களில் தோற்றது. இருப்பினும் லீக்கில் இருந்து கொண்டு வந்த 10 போனஸ் புள்ளி உதவியுடன் அரைஇறுதியை எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணி (கென்யா) அரைஇறுதிக்குள் நுழைந்தது இதுவே முதல்முறையாகும்.
அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், இந்திய அணி கங்குலியின் சதத்தோடு 91 ரன் வித்தியாசத்தில் கென்யாவையும் விரட்டியது.
20 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த இந்திய அணி சாம்பியன் கோப்பைக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் ஜோகன்னஸ்பர்க்கில் மல்லுகட்டியது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் கங்குலி ஆடுகளத்தின் ஈரப்பதம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார். ஆனால் அவரது கணிப்பை பொய்யாக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தனர். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.கேப்டன் ரிக்கிபாண்டிங் 140 ரன்களும் (121 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), டேமியன் மார்ட்டின் 88 ரன்களும் சேர்த்தனர்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீரர் தெண்டுல்கர் (4 ரன்) மெக்ராத்தின் முதல் ஓவரிலேயே கேட்ச் ஆக, ரசிகர்கள் மிரட்சியில் உறைந்து போனார்கள். இதன் பிறகு ஷேவாக் (82 ரன்), டிராவிட் (47 ரன்) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. 39.2 ஓவர்களில் இந்தியா 234 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. உலகக் கோப்பையை 3 முறை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையும் கிடைத்தது. இந்த உலகக் கோப்பையில் அந்த அணி தோல்வியே சந்திக்காமல் 11 ஆட்டங்களிலும் வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. ரிக்கிபாண்டிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஒரு சதம், 6 அரைசதம் உள்பட மொத்தம் 673 ரன்கள் திரட்டிய தெண்டுல்கர் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக தெண்டுல்கர் திகழ்கிறார்.
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வார்னே
இந்த உலகக் கோப்பையில் சில சர்ச்சைகளும் கிளம்பின. 'ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் செத்து விட்டது' என்று ராபர்ட் முகாபே அரசுக்கு எதிராக அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆன்டி பிளவரும், ஒலங்காவும் குரல் கொடுத்ததுடன், ஆட்டத்தின் போது தைரியமாக கையில் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை காட்டினர். இத்துடன் அவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. அதன் பிறகு வெளிநாட்டு போட்டிகளில் விளையாடினர்.
ஆஸ்திரேலிய மாயாஜால சுழற்பந்து வீச்சாளார் ஷேன் வார்னே ஊக்கமருந்து பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தங்களுக்குரிய ஆட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த சர்ச்சையில் சிக்கிய வார்னே உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. வார்னே இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு எந்த அணியாலும் அணை போட முடியவில்லை.
தலைவிதியை மாற்றிய மழை
ஜிம்பாப்வே-பாகிஸ்தான் இடையிலான கடைசி லீக் (ஏ பிரிவு) ஆட்டம் மூன்று அணிகளின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருந்தது. இதில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றால் அந்த அணிக்கு சூப்பர் சிக்ஸ் வாய்ப்பு. குறைந்த வித்தியாசத்தில் வென்றால் இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம், முடிவில்லாமல் போனால் ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு. இப்படிப்பட்ட சூழலில் ஜிம்பாப்வேக்கு ஜாக்பாட் அடித்தது. பாகிஸ்தான் 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டிதீர்த்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
ஏமாற்றத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பொல்லாக்.
'பி' பிரிவிலும் இதே நிலைமை தான். டர்பனில் நடந்த இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் 269 ரன்கள் இலக்கை தென்ஆப்பிரிக்கா துரத்தியது. எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்பதை அறிந்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அதை கணக்கிட்டு விளையாடினர். ஒவ்வொரு ஓவர் முடிவிலும் எவ்வளவு ரன் தேவை என்பது அணி நிர்வாகம் மூலம் குறிப்புகள் களத்திற்கு அனுப்பப்பட்டன. மழைக்கு முன்பாக அந்த ஓவரின் 5-வது பந்தில் சிக்சர் அடித்த மார்க் பவுச்சர் இதுவே அந்த ஓவருக்கு போதுமானது என்று கருதி கடைசி பந்தில் 'ரிஸ்க்' எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மழை பெய்தது. அப்போது தென்ஆப்பிரிக்கா 45 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி அந்த சமயத்தில் தென்ஆப்பிரிக்கா கூடுதலாக ஒரு ரன் எடுத்திருக்க வேண்டும். ஆட்டம் சமன் (டை) ஆனதால் ஷான் பொல்லாக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி பரிதாபகரமாக வெளியேற்றப்பட்டது. பவுச்சருக்கு தவறான கணக்கீட்டு தகவலை கொடுத்ததால் தென்ஆப்பிரிக்காவின் கனவு இந்த முறையும் கலைந்தது.