மகளிர் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Update: 2024-06-29 12:19 GMT

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 205 ரன்களும், மந்தனா 149 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாரா வோல்வார்ட் 20 ரன்களிலும், அன்னேக் போஷ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கை கோர்த்த சுனே லூஸ் - மரிசன்னே காப் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

இதில் லூஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெல்மி டக்கர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 2-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் அடித்துள்ளது. காப் 69 ரன்களுடனும், நடின் டி கிளெர்க் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஸ்னே ரானா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா இன்னும் 367 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போது வரை இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்