பெண்கள் பிரிமீயர் லீக் தொடக்க ஆட்டம்: அதிரடி காட்டிய ஹர்மன்பிரீத்...மும்பை 207 ரன் குவிப்பு...!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடர் மும்பையில் இன்று கோலாகலமாக தொடங்கியது.;
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடர் மும்பையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் அணியும் விளையாடி வருகின்றன. முன்னதாக இந்த ஆட்டத்துக்கான டாஸில் வென்ற பெத் மூனி பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஸ்திகா பாட்டியாவும், ஹெய்லி மேத்யூஸ்சும் களம் புகுந்தனர். பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதல் ரன்னை யாஸ்திகா பாட்டியா அடித்தார். அதேபோல் முதல் விக்கெட்டாகவும் அவரே அவுட் அனார். அவர் 8 பந்துகள் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்து தனுஜா கன்வர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து நாட் ஸ்கிவர்-பிரண்ட் களம் இறங்கினார். மேத்யூஸ்-ஸ்கிவர் பிரண்ட் இணை அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் 31 பந்தில் 3 போர், 4 சிக்கருடன் 47 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதை தொடர்ந்து நாட் ஸ்கிவர்-பிரண்ட்டும் 23 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், அமெலியா கெர்ரும் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய ஹர்மன்பிரீத் 22 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதில் அவர் 11 போர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் 65 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் ஹர்மன்பிரீத் 65 ரன், மேத்யூஸ் 47 ரன், அமெலியா கெர் 45 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி ஆட உள்ளது.