பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு 3-வது தோல்வி
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டெல்லி அணி 3-வது வெற்றியை பெற்றது.
மும்பை,
9-வது லீக் ஆட்டம்
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-3' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி, அதற்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரில் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சந்தித்தன.
மரிஜானே காப் அசத்தல்
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 18 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீராங்கனைகள் சபினெனி மேகனா ரன் எதுவும் எடுக்காமலும், லாரா வோல்வார்ட் 1 ரன்னிலும் அடுத்து வந்த ஆஷலி கார்ட்னெர் ரன் எதுவும் எடுக்காமலும் மரிஜானே காப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். ஹேமலதா 5 ரன்னில் ஷிகா பாண்டே பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஹர்லீன் தியோல் (20 ரன்) விக்கெட்டையும் மரிஜானே காப் காலி செய்தார்.
கடைசி கட்டத்தில் ஜார்ஜியா வார்ஹாம் (22 ரன்), கிம் கார்த் (ஆட்டம் இழக்காமல் 32 ரன்) ஆகியோரின் பங்களிப்பால் அந்த அணி 100 ரன்னை கடந்தது. 20 ஓவர்களில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மரிஜானே காப் 5 விக்கெட்டும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
ஷபாலி வர்மா அதிரடி
பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லானிங், ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினார். ஷபாலி வர்மா தொடக்கம் முதலே எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஷபாலி வர்மா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் இந்த போட்டி தொடரில் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். அவருக்கு பக்கபலமாக நின்ற மெக்லானிங் பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.
7.1 ஓவர்களில் டெல்லி அணி 107 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெக் லானிங் 21 ரன்களுடனும் (15 பந்து, 3 பவுண்டரி), ஷபாலி வர்மா 76 ரன்களுடனும் (28 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் அள்ளிய டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மரிஜானே காப் ஆட்டநாயகி விருது பெற்றார்.
டெல்லி அணிக்கு 3-வது வெற்றி
4-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ருசித்த 3-வது வெற்றி இதுவாகும். குஜராத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. மும்பை அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருக்கிறது. உ.பி.வாரியர்ஸ் 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது.