பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கியது வியாகாம் 18
அந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுக்கு போட்டியை ஒளிபரப்பு செய்வதற்காக ரூ.951 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்க உள்ளது.
புதுடெல்லி,
பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இதற்காக 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்படுகிறது. அணிகள் விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெறுவதற்காக வியாகாம்18, டிஸ்னி ஸ்டார், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் மல்லுகட்டின. இதில் அதிக தொகைக்கு கேட்டு இருந்த ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த வியாகாம்18 நிறுவனத்துக்கு டி.வி. மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று ஒதுக்கியது.
அந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுக்கு போட்டியை ஒளிபரப்பு செய்வதற்காக ரூ.951 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்க உள்ளது. அதாவது பெண்கள் ஐ.பி.எல்.-ல் ஒரு ஆட்டத்துக்கு ரூ.7.09 கோடி வழங்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஏற்கனவே வியாகாம்18 நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அடுத்த 5 ஆண்டுக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.23,758 கோடிக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.
'இது பெண்கள் கிரிக்கெட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட் அடுத்த கட்டத்துக்கு செல்லப்போகிறது.' என்று இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா மகிழ்ச்சி தெரிவித்தனர்.