எப்படியாவது ஜெயிச்சுடுங்க இந்தியா...இல்லனா... - நாசர் ஹுசைன் வேடிக்கை பதிவு
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.;
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களாக தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த இங்கிலாந்து தற்போது இந்தியாவிலும் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஐதராபாத் நகரில் பெற்ற வெற்றியையும் சேர்த்து அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இங்கிலாந்து கேப்டன்களின் பட்டியலில் அவர் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டனை (13 வெற்றிகள்) முந்தியுள்ளார். மேலும் அந்த பட்டியலில் அடுத்ததாக மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் 17 வெற்றிகளுடன் உள்ளார்.
எனவே இந்த தொடரில் அவருடைய சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் முறியடிக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் பிரபல டெய்லி மெயில் பத்திரிகையின் நிருபர் ரிச்சர்ட் கிப்ஸன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதை பார்த்த நாசர் ஹுசைன் அந்த பதிவை டேக் செய்து "கமான் இந்தியா" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அதாவது தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்தால் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய சாதனையை உடைத்து விடுவார் என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் எப்படியாவது வெல்லுங்கள் இந்தியா என்ற வகையில் நாசர் ஹுசைன் ஜாலியாக பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.