இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? - அஷ்வின் பதில்

ஆசிய கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Update: 2023-02-07 06:55 GMT

சென்னை,

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூ டியூப் சேனலில் கூறியதாவது,

பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள்.

ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்ன். ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடரகள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்