டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு மும்பையின் கடைசி கட்ட போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா..? - பொல்லார்டு அளித்த பதில்

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-05-07 11:39 GMT

Image Courtesy: X (Twitter) 

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரை முன்னிட்டு அனைத்து அணிகளும் டி20 உலகக்கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, பும்ரா போன்ற சீனியர் வீரர்களும், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், சாம்சன் போன்ற இளம் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. எனவே அதில் இந்தியாவின் வெற்றிக்கு புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடுவதற்காக மும்பையின் கடைசிக்கட்ட போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பி.சி.சி.ஐ-யும் மும்பை அணியிடம் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கடைசி கட்ட போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க முடியாது என்று மும்பை அணியின் பயிற்சியாளர் கைரன் பொல்லார்டு சூசகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு,

இதைப் பற்றி நான் எதையும் பேசவில்லை. இந்த நேரத்தில் அது என்னுடைய வேலையில்லை என்று நினைக்கிறேன். ஆனால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இருப்பினும் நாங்கள் அனைவரும் மொத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காகவே இங்கே இருக்கிறோம். சில நேரங்களில் உலகக்கோப்பை போன்ற அதிக தொலைவில் இருக்கும் விஷயங்களை நீங்கள் சிந்திக்கும் போது அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே உங்களுடைய செயல்பாடுகள் பாதிக்கும்.

எனவே எங்கள் அணியை பொறுத்த வரை முதலில் ஐ.பி.எல் தொடரை முழுமையாக முடிப்பது முக்கியம். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். ஐ.பி.எல் முடிந்து பும்ரா இந்திய அணிக்கு செல்லும் போது அங்கு தான் அந்த சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்