தொடரை கைப்பற்றுவது யார்..? - இந்தியாவுக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா...!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹெட் 33 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டேவிட் வார்னர் மிட்செல் மாட்ஷ் உடன் இணைந்தார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ஷ் 47 ரன்னிலும், வார்னர் 23 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய லபுஸ்சாக்னே 28 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து சீன் அப்போட், ஆஷ்டன் அகர் இணை ஜோடி சேர்ந்தது.
இறுதியில் அந்த அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 47 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், டிராவிஸ் ஹெட் 33 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது.