அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது யார்? ஐதராபாத்-லக்னோ இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டத்தில் இன்று ஐதராபாத்-லக்னோ அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 58-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.
மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நடப்பு தொடரில் 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகள் பெற்றுள்ளது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அந்த அணி எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் தொடர முடியும் என்ற நெருக்கடியுடன் உள்ளது. அந்த அணி முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 215 ரன் இலக்கை எட்டிப்பிடித்த உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் ஷர்மா ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். மயங்க் அகர்வால், கேப்டன் மார்க்ரம், ஹாரி புரூக் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்து வீச்சில் மயங்க் மார்கண்டே, மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் வலுசேர்க்கின்றனர்.
லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்றிருக்கிறது. பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டத்தில் தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டி தொடரில் இருந்து விலகிய கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். அதன் பிறகு நடந்த சென்னைக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி இனி வரும் ஆட்டங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனியும், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், அவேஷ்கான், அமித் மிஸ்ராவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கேப்டன் குருணல் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இன்னும் கணிசமாக பங்களிக்க வேண்டியது அவசியமானதாகும். ஐதராபாத்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்று இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கும்.
அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு ஆட்டங்களிலும் லக்னோ அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.