கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்பது உரிமையாளர்களின் விருப்பம் - பாண்ட்யா விமர்சனங்கள் குறித்து ரவி சாஸ்திரி கருத்து

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-04-03 03:19 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாக பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு சீசன்களில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யா இந்த சீசனில் பரிமாற்றம் முறையில் குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்டு மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும், அந்த அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா இந்த சீசனில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை கேப்டனாக்கிய முடிவை பல மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை அணி இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளதால் பாண்ட்யாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஐ.பி.எல் என்பது இந்திய அணி கிடையாது என்பதால் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லை என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, முதலில் இது இந்திய அணி கிடையாது. இது ஐ.பி.எல். இங்கே பல டாலர்களை முதலீடு செய்தவர்கள் தான் உரிமையாளர்கள். அந்த சூழ்நிலையில் யார் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்.

இருப்பினும் இந்த முடிவு எடுக்கப்பட்டதில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை நீங்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்ட்யாவை அடுத்த 3 வருடங்களுக்கு அணியின் நலனுக்காக கேப்டனாக்க விரும்பினால் அதை இவ்வளவு எதிர்ப்புகள் வருவதற்கு முன்பாக தெரிவித்திருக்க வேண்டும்.

ஏனெனில் சோசியல் மீடியாவை பற்றி உங்களுக்கு தெரியும். அங்கே எல்லா வகையான விஷயங்களும் வெளியே வரும். அங்கே சில கதைகள் விதைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அது மற்றவர்களின் பெயர்களிலும் பதிக்கப்படுகிறது. எனவே அதை தவிர்ப்பதே பேரின்பமாகும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்