"எதற்கு இவ்வளவு ஓய்வுகள்? "- ராகுல் டிராவிட்டை சாடிய ரவி சாஸ்திரி

நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-17 11:03 GMT

Image Tweeted By BCCI  

மும்பை,

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நாளை தொடங்கி நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி மேலும் கூறியதாவது:-

எனக்கு ஓய்வுகளில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். உண்மையைச் சொல்வதென்றால் உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகளுக்கு என்ன தேவை?

ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் ஓய்வு கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் தனது அணியுடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா அணி ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதும் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இடைக்கால தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் செயல்பட்டார்.

அதே நேரத்தில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போது, எந்த அணிக்கு எதிராக இந்தியா விளையாடியிருந்தாலும், அவர் முழு நேரமும் பயிற்சியாளராக செயல்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்