பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்ததில் உங்களுக்கு என்ன ஆதாயம்...? - ரமீஸ் ராஜா
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானின் பாபர் - ரிஸ்வான் தொடக்க ஜோடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பான ஆட்டத்தை பாபர் ஆசம் - ரிஸ்வான் இணை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானின் தொடக்க ஜோடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதியவர்களை அணிக்குள் கொண்டு வருவதில் தவறில்லை.
லீக் கிரிக்கெட்டில் அந்த வீரர் சிறப்பாக செயல்படலாம். சர்வதேச கிரிக்கெட் என்பது வேறு. பெரிய அளவில் நெருக்கடி மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். உலக அளவில் பெயர் பெற்ற பாபர் மற்றும் ரிஸ்வான் இணையை பிரித்து உள்ளீர்கள்.
ஒரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்மிற்கு வர நேரம் எடுக்கும். அதற்கு அதிக பயிற்சி வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் இணையரை பிரிக்க வேண்டிய அவசியம் என்ன..?. அதன் மூலம் உங்களுக்கு என்ன பலன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.