கவுதம் கம்பீர் ஒரு நயவஞ்சகர் - இந்திய முன்னாள் வீரர் கடும் தாக்கு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீரை முன்னாள் வீரர் ஒருவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.;

Update:2025-01-09 19:37 IST

மும்பை,

டிராவிட்டுக்கு பின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கம்பீரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இவரது தலைமையில் இந்தியா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் (0-3) தற்போது பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 10 வருடங்களுக்கு பின் இழந்துள்ளது. இதனால் இவர் மீது பல தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, கம்பீரை நயவஞ்சகர் என கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது குறித்து மனோஜ் திவாரி பேசுகையில், "கம்பீர் ஒரு நயவஞ்சகர். அவர் சொல்வதை எப்போதும் செய்ய மாட்டார். இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரால் என்ன பயன்? தலைமை பயிற்சியாளர் என்ன சொன்னாலும், அவர் அதை ஒப்புக்கொள்வார். மோர்னே மோர்கல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து வந்தவர். அபிஷேக் நாயர் கம்பீருடன் கொல்கத்தா நைட் ரைடர்சில் இருந்தார். மேலும் அவர் தனது அறிவுறுத்தல்களை மீற மாட்டார் என்பது இந்திய தலைமை பயிற்சியாளருக்குத் தெரியும்.

ஐ.பி.எல். தொடரில் கம்பீர் தனியாக ஒன்றும் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ஜாக் காலிஸ், சுனில் நரைன் மற்றும் நான் என அனைவரும் அதில் பங்களித்தோம். ஆனால் பெருமையை யார் எடுத்துக் கொண்டார்கள்? வெற்றிக்கான அனைத்து பெருமையையும் கம்பீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் சூழல் நிலவியது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்