விராட் கோலி தற்போது ஓய்வு பெற்றால் இந்திய அணிக்குத்தான் இழப்பு - ஆஸி.முன்னாள் கேப்டன்

விராட் கோலி தற்போது ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்குத்தான் இழப்பு என்று கிளார்க் தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-09 18:36 IST

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைபப்ற்றி அசத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த தோல்விக்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் முதல் போட்டியில் சதமடித்த அவர், அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதை தவிர்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் போல கவர் டிரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இருப்பினும் விராட் கோலி தொடர்ந்து அப்படியே அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இதனால் அவர் மீது இந்திய ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். மேலும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி தற்போது ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்குத்தான் இழப்பு என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் பேசுபவர் விராட் கோலி. அந்த நபர் நாளை கூட இரட்டை சதம் அடிக்கலாம். அந்தளவுக்கு நல்ல வீரரான அவர் தமக்குள் திறன் இருக்கும் வரை விளையாட வேண்டும். ஒருவேளை தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெற்றால் அது ஒரே ஒரு அணிக்கு மட்டுமே இழப்பாக இருக்கும். அது இந்தியா. ஒருவேளை நான் அணியின் கேப்டனாக இருந்து விராட் கோலி அதில் இருந்தால் இப்படி ரன்கள் அடிக்காத சூழ்நிலையில் கூட அவர் அணியில் தொடர்ந்து இருக்க சண்டை இடுவேன்.

விராட் கோலியை காட்டிலும் சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர். இந்த ஆஸ்திரேலிய தொடரில் சச்சினை போல் விராட் கோலி விளையாட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். கவர் டிரைவ் அடித்து விக்கெட்டை இழந்த சச்சின் பின்னர் சிட்னியில் 200 ரன்கள் அடித்தார். அந்த வகையில் விராட் கோலியை விட சச்சின் வித்தியாசமான வீரர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்