விராட் கோலி குறித்து அமித் மிஸ்ரா கூறியது உண்மையல்ல... பியூஷ் சாவ்லா பதிலடி

பணம், அதிகாரம் வந்ததால் முன்பு இருந்ததை விட விராட் கோலி மாறிவிட்டதாக அமித் மிஸ்ரா சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

Update: 2024-08-22 14:49 GMT

புதுடெல்லி,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

அந்த சூழ்நிலையில் பணம், அதிகாரம் வந்ததால் 16 வயதில் இருந்ததை விட தற்போதைய விராட் கோலி முழுமையாக மாறிவிட்டதாக இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சமீபத்தில் விமர்சித்திருந்தார். இருப்பினும் ரோகித் சர்மா அப்போதும் இப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போதெல்லாம் விராட் கோலி தம்மிடம் பேசுவது கூட இல்லை என்று அமித் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியை பற்றி தம்முடைய சீனியரான அமித் மிஸ்ரா தெரிவித்த கருத்துகள் உண்மையல்ல என்ற வகையில் இந்திய வீரர் பியூஸ் சாவ்லா பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "எவ்வளவு கிரிக்கெட்டில் நான் விளையாடியுள்ளேன், எனக்கு எந்தளவுக்கு தெரியும் என்பதைத் தாண்டி விராட் கோலியுடன் எப்போதுமே எனக்கு நல்ல அனுபவம் இருந்தது. அவருடன் ஜூனியர் கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடிய நான் பின்னர் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் விளையாடியுள்ளேன். ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த மனநிலை இருக்கும். ஆனால் இன்று விராட் கோலியை சந்தித்தால் கூட அது நன்றாக இருக்கும்.

சொல்லப்போனால் கடந்த ஆசிய கோப்பையில் விராட் கோலி விளையாடிய போட்டியில் நான் வர்ணனையாளராக இருந்தேன். அப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் பவுண்டரி அருகே இருந்த என்னிடம் வந்த விராட் கோலி 'ஏதாவது சாப்பிட நன்றாக ஆர்டர் செய்யுங்கள்'என்று சொன்னார். அதன் பின் நாங்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம். அந்த வகையில் 10 - 15 வருடங்களுக்கு முன்பு போலவே நாங்கள் இப்போதும் பேசிக் கொள்கிறோம். அமித் மிஸ்ரா தனது கெரியரில் விளையாடி பந்து வீசிய விதம் சிறப்பானது. சீனியரான அவரிடம் நானும் நிறைய கற்றுள்ளேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்