இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் - பிரையன் லாரா நம்பிக்கை

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் நாளை (12-ம் தேதி) தொடங்குகிறது.

Update: 2023-07-11 10:13 GMT

டொமினிகா,

இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் நாளை (12-ம் தேதி) தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இளம் இடது கை பேட்ஸ்மேன்களான கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில் முதல் போட்டியாகும். இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆலோசகரான முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது:

எங்களுக்கு முக்கியமான 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2 வருட சுழற்சியில் எங்களுக்கு தொடக்க போட்டியாக அமைந்துள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய உலகின் தலை சிறந்த அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களை உள்ளடக்கிய கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான மேற்குஇந்தியத் தீவுகள் அணி களமிறங்குகிறது. பயிற்சி முகாமை எங்கிருந்து தொடங்கினோம், தற்போது எங்கு இருக்கிறோம் என்னும் வகையில் நாங்கள் சரியான திசையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தத் தொடரில் சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு கடுமையான போட்டி நிறைந்த தொடராகும். ஆனால் இவர்களிடமிருந்து சிறந்ததை பெற முடியும் என்று நான் உணர்கிறேன்.

கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ் ஆகியோர் திறமையான பேட்ஸ்மேன்கள். இவர்களின் விளையாட்டு பாணி மற்றும் அணுகுமுறையைப் பார்க்கும்போது, மிக உயர்ந்த மட்டத்தில் சிறப்பாக செயல்படும் திறனை கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்.

இதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் சர்வதேச கிரிக்கெட் வீரராக நீங்கள் இந்த நிலைக்கு வருகிறீர்கள் என்றால், நீங்கள் எந்த வயதிற்குள் இருந்தாலும், மிக விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மனப்பான்மை மற்றும் கேட்டுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்