முந்தைய 4 ஆட்டங்களை போல் எங்களது அணியின் கலவை இருக்காது..!! - ராகுல் டிராவிட்

முந்தைய 4 ஆட்டங்களை போல் எங்களது அணியின் கலவை இருக்காது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-21 22:04 GMT

தர்மசாலா,

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.

வங்காளதேசத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கணுக்காலில் காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்றைய ஆட்டத்தில் ஆடமுடியாதது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவரால் ஏற்பட்டு இருக்கும் வெற்றிடத்தை இந்திய அணி எப்படி நிரப்ப போகிறது என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கக்கூடிய அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனா அல்லது பவுலரா யார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்பது உறுதியாக தெரியவில்லை. பேட்ஸ்மேனாக இருந்தால் சூர்யகுமார் யாதவும் பந்து வீச்சாளராக இருந்தால் முகமது ஷமி அல்லது அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் முந்தைய 4 ஆட்டங்களை போல் எங்களது அணியின் கலவை இருக்காது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், 'நியூசிலாந்து மிகவும் சிறந்த அணியாகும். அவர்கள் நன்றாக விளையாடி வருகிறார்கள். நியூசிலாந்து அணியினர் இந்திய மண்ணில் நிறைய ஆட்டங்களில் ஆடி இருக்கிறார்கள். அந்த நாட்டு வீரர்கள் நிறைய பேர் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். அதனால் அவர்களுக்கு இங்குள்ள சூழ்நிலை நன்கு தெரியும். எனவே இந்த ஆட்டம் கடும் சவாலாக இருக்கும். முக்கிய வீரரான ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதால் முந்தைய 4 ஆட்டங்களை போல் எங்களது அணியின் கலவை இருக்காது. ஹர்திக் பாண்ட்யா இடத்துக்கு யாரை கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசித்து இருக்கிறோம். ஆடுகள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவு செய்வோம்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்