'சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்வோம்' ரோகித் சர்மா நம்பிக்கை

உள்நாட்டு ரசிகர்களின் மத்தியில் உலகக் கோப்பையை வெல்வோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Update: 2023-08-07 21:59 GMT

மும்பை,

ரோகித் சர்மா பேட்டி

உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலகக் கோப்பை வெற்றியை நான் அருகில் இருந்து பார்த்ததில்லை. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை. பார்க்கவே அழகான உலகக் கோப்பைக்கு பின்னால் நிறைய மறக்க முடியாத நினைவுகளும், வரலாறும் இருக்கிறது. இந்த முறை உலகக் கோப்பையை கையில் ஏந்த முடியும் என்று நம்புகிறேன்.

சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் ஒவ்வொரு இடத்திற்கும், மைதானத்திற்கும் செல்லும் போதும் ரசிகர்களின் ஆதரவு பிரமாண்டமாக இருக்கும் என்பது தெரியும். அது மட்டுமின்றி அது சாதாரண போட்டி அல்ல. உலகக் கோப்பை. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

நினைவில் உள்ள ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டி குறித்து கேட்கிறீர்கள். 2003-ம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்பு வரை உண்மையிலேயே சிறப்பாக ஆடியது. பேட்டிங்கில் சச்சின் தெண்டுல்கர் ரன்வேட்டை நடத்தினார்.

வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு நல்லவிதமாக அமையவில்லை. துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறி விட்டோம்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை நாம் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒன்று. ஆனால் நான் ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு பந்தையும் வீட்டில் டி.வி.யில் கண்டுகளித்தேன். இந்த உலகக் கோப்பையில் எனக்கு இரு விதமான உணர்வு பூர்வமான விஷயங்கள் உண்டு. ஒன்று நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். அதனால் உலகக் கோப்பை போட்டியை பார்க்ககூடாது என்று முடிவு செய்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன். அடுத்ததாக இந்திய அணி கால்இறுதியில் இருந்து அருமையாக விளையாடி மகுடம் சூடியதை என்னால் மறக்க முடியாது.

அதன் பிறகு 2015 மற்றும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் நானும் அணியில் இருந்தேன். இதில் நாங்கள் நன்றாக விளையாடினோம். அரைஇறுதி வரை முன்னேறினோம். இறுதி சுற்றை எட்ட எல்லா வகையில் முயற்சித்து பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

இப்போது மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். கடைசி கட்ட தடையை தாண்டி கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன். ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் நீங்கள் உலகக் கோப்பையை வென்று விட முடியாது. போட்டி நடக்கும் ஒன்றரை மாதங்களும் சிறப்பாக விளையாடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புது நாள். ஒவ்வொரு ஆட்டமும் புது தொடக்கம். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்று கிடையாது. ஒரு நாள் கிடைக்கும் உத்வேகத்தை அடுத்த நாளுக்கு கொண்டு செல்ல முடியாது.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்