எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் - ஷசாங்க் சிங் நம்பிக்கை

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷசாங்க் சிங் 68 ரன்கள் குவித்தார்.

Update: 2024-04-27 08:25 GMT

கொல்கத்தா,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை வெறும் 18.4 ஓவர்களிலே பஞ்சாப் அடித்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு அதிரடியாக விளையாடிய பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 108 ரன்களும், ஷசாங்க் சிங் 68 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 54 ரன்களும் குவித்து அசத்தினர்.

இந்த வருடம் பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் ஷசாங்க் சிங் இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் 2 பவுண்டரி 8 சிக்சருடன் 68 (28 பந்துகள்) ரன்கள் குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் தரமான சுனில் நரைனுக்கு எதிராக அடிக்கக்கூடாது என்று முடிவெடுத்ததாக தெரிவிக்கும் அவர் மற்ற பவுலர்களை வெளுத்து வாங்கியதாக கூறியுள்ளார். அத்துடன் இங்கிலாந்துக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ போன்றவர் தம்மை பாராட்டியது புத்துணர்ச்சியை கொடுத்ததாகவும் தெரிவிக்கும் ஷசாங்க் சிங் இப்போதும் பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பெவிலியனில் இருக்கும்போது பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தேன். அதில் நல்ல உயரத்துடன் பந்து வருவதாக உணர்ந்தேன். சுனில் நரைனுக்கு எதிராக நாங்கள் சிங்கிள், டபுள் ரன்கள் மட்டும் எடுத்ததில் மகிழ்ச்சி. அதற்கு பதிலாக மற்ற பவுலர்களை அடிக்க முயற்சித்தேன். பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஸ் எனக்கு நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளார். எதிர்ப்புறம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்ட ஜானி பேர்ஸ்டோ போன்றவர் உங்களுக்கு கை தட்டினால் அது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இன்னும் எங்களுக்கு 5 போட்டிகள் இருக்கிறது. எனவே இப்போதும் எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்