பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான பேட்டிங்.. முதல் நாளில் 311 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலிய அணியின் முதல் 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் ஸ்காட் போலந்து அணியில் இடம்பெற்றனர். இந்திய அணியில் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் ஆடும் வாய்ப்பை பெற்றார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். அனுபவ வீரரான கவாஜா நிதானமாக விளையாட கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடினார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்த பும்ராவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
பும்ராவின் பந்துவீச்சில் 2 சிக்சர்கள் பறக்கவிட்ட அவர் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்த நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த ஆஸ்திரேலியா வலுவான நிலையை நோக்கி பயணித்தது.
நீண்ட நாள் கழித்து பார்முக்கு திரும்பிய உஸ்மான் கவாஜா 57 ரன்களிலும், லபுஸ்சான் 72 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளைக்கு பின்பு பந்துவீச்சில் சிறிது ஆக்ரோஷம் காட்டிய இந்தியா விக்கெட்டுகளை விரைவாக காலி செய்தது. முந்தைய போட்டியின் ஹீரோ டிராவிஸ் ஹெட் இந்த முறை டக் அவுட்டில் வீழ்ந்தார். மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும், அலேக்ஸ் கேரி தனது பங்குக்கு 31 ரன்கள் அடித்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்டீவ் சுமித் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் முதல் 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.