பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்கா அணி

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தியது.

Update: 2024-12-26 16:34 GMT

Image Courtacy: ICCTwitter

சென்சூரியன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்து வீச்சால், அந்த அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 71 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்திருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவருடன் கேப்டன் பவுமா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷெஷாத் 2 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணியை விட 129 ரன்கள் பின் தங்கி உள்ளது. நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்